4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு: சார்மடி மலைப்பாதையில் வேரோடு சரிந்து விழுந்த ராட்சத மரம்

சார்மடி மலைப்பாதையில் வேரோடு ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2019-06-12 21:45 GMT
சிக்கமகளூரு,

சார்மடி மலைப்பாதையில் வேரோடு ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் சுமார் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் தேஜஸ்வி சூர்யா எம்.பி.யும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பரிதவித்தார்.

இந்த சம்பவம் குறித்த தகவல்கள் வருமாறு:-

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா சார்மடி மலைப்பகுதி வழியாக சிக்கமகளூரு-மங்களூரு தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. கடந்த சில தினங்களாக இந்த மலைப்பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இடைவிடாது பெய்து வரும் மழையால் இந்த மலைப்பகுதியில் பல்வேறு இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன.

அதேபோல் தொடர் கனமழையால் சிக்கமகளூரு-மங்களூரு மலைப்பாதையில் அன்னப்பா கோவில் அருகே ராட்சத மரம் ஒன்று வேரோடு சரிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அச்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் பா.ஜனதாவைச் சேர்ந்தவரும், பெங்களூரு தெற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான தேஜஸ்வி சூர்யா அந்த மலைப்பாதையில் தனது காரில் சென்றார். பின்னர் அவரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டார்.

இந்த நிலையில் இதுபற்றி அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அகற்றினர். பின்னர் போக்குவரத்தை சீரமைத்தனர். இதையடுத்து சுமார் 4 மணி நேரம் நீடித்த போக்குவரத்து பாதிப்பு மெதுவாக சீரடைந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்