ரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரம்: தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்கு

ரெயில் நிலையத்தில் கையெறி குண்டு கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், தவறான தகவல்களை பரப்பிய ரெயில்வே போலீஸ் ஏட்டுகள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2019-06-12 22:00 GMT
பெங்களூரு,

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் கடந்த மாதம்(மே) 31-ந் தேதி நடைமேடை 1-ல் முன்பு மர்ம இரும்பு பொருள் கிடந்தது. இது வெடிகுண்டு என்று சந்தேகிக்கப்பட்டது. இந்த இரும்பு பொருளை கைப்பற்றிய போலீசார் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பினர். இந்த ஆய்வின்போது அந்த இரும்பு பொருள், ராணுவவீரர்கள் பயிற்சி பெறும் கையெறி குண்டு என்பதும், அந்த குண்டு பயன்படுத்தப்பட்டதால் அது வெடிக்கும் தன்மையுடன் இல்லை என்பதும் தெரியவந்தது.

இதற்கிடையே, சரியாக பணி செய்யாத ரெயில்வே போலீசார் மீது மண்டல பாதுகாப்பு கமிஷனர் சத்தோபாத்யா பானர்ஜி நடவடிக்கை எடுத்தார். இதனால், சத்தோபாத்யா பானர்ஜியை பழிவாங்க சில ரெயில்வே போலீசார் கையெறி குண்டை நடைமேடை அருகே வைத்ததாக தகவல்கள் பரவின. இதுபற்றி விசாரித்தபோது, தவறான தகவல்களை செய்தியாளர்களிடம் ரெயில்வே போலீஸ் பிரிவில் ஏட்டுகளாக பணி செய்து வரும் மஞ்சுநாத், ராஜ்குமார் ஆகியோர் கூறி அவதூறு பரப்பியது தெரியவந்தது. இதுகுறித்து ரெயில்வே சிறப்பு இன்ஸ்பெக்டர் ஹாப்சன் பெங்களூரு சிட்டி ரெயில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் ஏட்டுகளான மஞ்சுநாத், ராஜ்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்