காட்டுயானை தாக்கி 2 பேர் காயம், சிகிச்சை பலனின்றி விவசாயி சாவு

தேவாலா, முதுமலையில் காட்டு யானை தாக்கி 2 பேர் காயமடைந்தனர். இதில் சிகிச்சை பலனின்றி விவசாயி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-06-12 22:30 GMT
கூடலூர், 

கூடலூர் தாலுகாவில் நேற்று முன்தினம் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் 2 பேரை காட்டுயானை தாக்கியது. இதில் கூடலூர் தாலுகா தேவாலா அட்டி பகுதியை சேர்ந்த கூலிதொழிலாளி கார்த்திகேயன் (வயது 21). இவர் வீட்டில் இருந்து தேவாலா பஜாருக்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது காட்டுயானை தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் மேப்பாடி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மற்றொரு சம்பவத்தில் கூடலூர் தாலுகா முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நம்பிக்குன்னு பகுதியை சேர்ந்த விவசாயி சுப்பிரமணியம் (82). இவர் நம்பிக்குன்னு-முதுகுளிக்கும் இடையே நடந்து சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த காட்டுயானை கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

அவரின் சத்தம் கேட்டு அங்கு வந்த பொதுமக்கள் யானையை விரட்டி விவசாயியை மீட்டனர். இந்த நேரத்தில் அங்கு மழை பெய்து கொண்டிருந்ததால் மண் பாதை சேறும், சகதியுமாக இருந்தது. இதனால் அவரை வானங்களில் சிகிச்சைக்கு கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் தொட்டில் கட்டி, அதில் விவசாயியை வைத்து சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் தூக்கி சென்றனர். பின்னர் அங்கு தயாராக நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மூலம் கூடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து விவசாயியை வயது முப்பு காரணமாகவும், ஊட்டி காலநிலை காரணமாகவும் மேல்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த நிலையில் முதுமலையில் விவசாயி இறந்த சம்பவம் குறித்து பொதுமக்கள் கூறுகையில், கோவையில் இருந்து பிடித்து வந்து முதுமலையில் விடப்பட்ட விநாயகன் யானை தாக்கிதான் விவசாயி இறந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விநாயகன் யானை அட்டகாசம் அதிகரித்து வருகிறது. எனவே விநாயகன் யானையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

மேலும் செய்திகள்