ஆலங்குளத்தில் பட்டப்பகலில் துணிகரம்: அ.தி.மு.க. நிர்வாகி கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை மர்மநபர்களுக்கு வலைவீச்சு

ஆலங்குளத்தில் பட்டப்பகலில் அ.தி.மு.க. நிர்வாகி காரின் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2019-06-13 22:00 GMT
ஆலங்குளம், 

ஆலங்குளத்தில் பட்டப்பகலில் அ.தி.மு.க. நிர்வாகி காரின் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அ.தி.மு.க. நிர்வாகி 

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மருதபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 60). இவர் அ.தி.மு.க. மாநில பொதுக்குழு உறுப்பினராக உள்ளார். மேலும் அரசு ஒப்பந்ததாரராகவும் இருக்கிறார். இவர் நேற்று மதியம் தனது காரில் ஆலங்குளத்திற்கு சென்றார். அங்குள்ள ஒரு வங்கி முன்பு காரை நிறுத்திவிட்டு, அந்த வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து ரூ.4 லட்சம் எடுத்தார்.

பின்னர் அந்த பகுதியில் உள்ள மற்றொரு வங்கிக்கு சென்று தனது கணக்கில் இருந்து மேலும் ரூ.4 லட்சம் எடுத்தார். இதையடுத்து 2 வங்கிகளிலும் இருந்து எடுத்த ரூ.8 லட்சத்தை தனது காரில் வைத்த அவர், அந்த பகுதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

துணிகர கொள்ளை 

சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. மேலும், காரில் இருந்த ரூ.8 லட்சம் மாயமாகி இருந்தது. இதில் அதிர்ச்சி அடைந்த பாண்டியராஜன் இதுகுறித்து ஆலங்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷினி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பாண்டியராஜன் வங்கிகளில் பணம் எடுப்பதையும், அந்த பணத்தை காரில் வைத்து விட்டு வெளியே செல்வதையும் நோட்டமிட்ட மர்ம நபர்கள், கார் கண்ணாடியை உடைத்து ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு 

பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், கார் நிறுத்தப்பட்ட வங்கியின் முன்பு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்