மத்தூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவர் கைது 55 பவுன் நகைகள் பறிமுதல்

மத்தூர் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2019-06-13 23:00 GMT
மத்தூர், 

மத்தூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் புகுந்த மர்ம நபர்கள் பணம், நகைகளை திருடி சென்றனர். தொடர் திருட்டு சம்பவத்தால் மக்கள் அச்சமடைந்து வந்தனர். இந்தநிலையில் தொடர் திருட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் உத்தரவிட்டார்.

அதன்பேரில் ஊத்தங்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜபாண்டியன் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அதன்படி தனிப்படை போலீசார் மத்தூர் பகுதியில் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர், போச்சம்பள்ளி அருகே உள்ள புளியாண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த அய்யப்பன்(வயது 35) என்பதும், மத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

மேலும், அய்யப்பன் மீது ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் 3 வழக்கும், மத்தூரில் 3 வழக்கும், கல்லாவியில் 2 வழக்கும், சாமல்பட்டியில் 1 வழக்கும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யப்பனை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 55 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்