ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் புதுவை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

புதுவை ஆம்பூர் சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நகராட்சி அதிகாரிகள் அதிரடியாக ஈடுபட்டனர்.

Update: 2019-06-13 22:15 GMT
புதுச்சேரி, 

புதுவையில் தொழில்வளத்தை பெருக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கைகளுக்கு பலன் கிடைத்து வருகிறதோ இல்லையோ, ஆனால் நாள்தோறும் சாலைகளை ஆக்கிரமித்து கடை அமைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இத்தகைய ஆக்கிரமிப்பு கடைகளால் புதுவையில் பெரும்பாலான சாலை விபத்துகள் ஏற்படுகின்றன. ஆனால் அதை நகராட்சி அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் விதிகளை மீறுவதாக கூறி வாகன ஓட்டுனர்களை பிடித்து வழக்குப்போடுவதிலேயே குறியாக உள்ளனர்.

ஒரு சில ஆக்கிரமிப்பாளர்களால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு அரசியல் பலமும், சாதி, சமூக அமைப்புகளின் பலமும் இருப்பதால் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சாலைகளை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து வருகின்றனர்.

குறிப்பாக மறைமலை அடிகள் சாலை, புஸ்சி வீதி, ஆம்பூர் சாலை, புவன்கரே வீதி, காமராஜ் சாலை, முதலியார்பேட்டை கடலூர் சாலையில் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்குள் நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு கடைகள் உருவாகியுள்ளன. இடங்களை ஆக்கிரமித்து கடை வைப்பவர்களை விட இடம் பிடிப்பதற்காக அலங்கோலமாக கொட்டகை அமைப்பவர்கள், பழைய உடைந்த வாகனங்களை கொண்டு வந்து நிறுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக அவ்வப்போது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கிறோம் என்று சில நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனால் ஒருசில நாட்களுக்குள் அங்கு மீண்டும் ஆக்கிரமிப்பு ஏற்படுகிறது. சமீபத்தில் லெனின் வீதி, காமராஜ் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது சில வியாபாரிகள் தாங்களாகவே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக கூறி ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கூரைகளை கழற்றி எடுத்து சென்றனர். அதிகாரிகளின் கண்துடைப்புக்காக அதை செய்த அவர்கள் தற்போது மீண்டும் அந்த கூரைகளை அமைத்து ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்துவது தொடர்கிறது.

இந்தநிலையில் ஆம்பூர் சாலையில் பெரிய வாய்க்கால் கரை நடைபாதையில் ஏராளமான கடைகள் தற்போது அமைக்கப்பட்டு உள்ளன. புதுவை நகராட்சி சார்பில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நேற்று தொடங்கியது. நகராட்சி ஆணையர் அர்ஜூன் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜெயராமன், அறிவுசெல்வம் மற்றும் நகராட்சி அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வியாபாரத்துக்கு பயன்படுத்தப்பட்ட தள்ளுவண்டிகளை நகராட்சி ஊழியர்கள் தங்களது வாகனங்களில் தூக்கிச்சென்றனர். பெரிய அளவில் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடைகளை இன்னும் 5 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை நோட்டீசை ஒட்டினார்கள். ஆள் இல்லாமல் இருந்த கடைகளுக்கு சீல் வைத்துவிட்டும் சென்றனர். அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக ஆம்பூர் சாலையில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

இதேபோல் புதுவையின் முக்கிய வீதிகளிலும் புதுச்சேரி, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நேற்று தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்