கொருக்குப்பேட்டையில் சரக்குரெயில் தடம்புரண்டது 3 மணி நேரம் ரெயில் சேவை பாதிப்பு

கொருக்குப்பேட்டையில் சரக்குரெயில் தடம்புரண்டதால் ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர்.

Update: 2019-06-13 23:00 GMT
பெரம்பூர். 

சென்னை தண்டையார்பேட்டை ரெயில்வே யார்டில் இருந்து சரக்கு ரெயில் காலிப்பெட்டிகளுடன் கொருக்குப்பேட்டை ரெயில் நிலையம் வழியாக மதுரைக்கு நேற்று அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டது. அப்போது சரக்கு ரெயிலில் இருந்த 3 பெட்டிகள் திடீரென தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டது.

இதனால் சென்னை சென்டிரலில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும், சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை வரும் புறநகர் ரெயில்களும், டெல்லியில் இருந்து வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலும் திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

இந்த ரெயில் சேவை பாதிப்பால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகினர். பாதி வழியிலேயே ரெயில்களை நிறுத்தியதால் வேலைக்கு செல்லக்கூடியவர்கள் ரெயில்களில் இருந்து இறங்கி பஸ், ஆட்டோ மூலம் அலுவலகங்களுக்கு சென்றனர்.

இதற்கிடையே சரக்கு ரெயில் தடம்புரண்ட தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சரக்குப்பெட்டிகளையும் அப்புறப்படுத்தினர். இதனையடுத்து அப்பகுதியில் ரெயில் சேவை தொடங்கியது.

சரக்கு ரெயில் தடம் புரண்டதால் 3 மணி நேரத்திற்கும் மேலாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

மேலும் செய்திகள்