பெரியகுளத்தில், வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து சாலைமறியல்

வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பெரியகுளத்தில் சாலைமறியல் நடந்தது.

Update: 2019-06-13 23:00 GMT
பெரியகுளம்,

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் முரளி. இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முரளி கடையில் இருந்த போது அந்தபகுதியில் சருத்துப்பட்டியை சேர்ந்த லாரி டிரைவர் ரஞ்சித் மோட்டார்சைக்கிளில் வேகமாக சென்றுள்ளார். அதை முரளி கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த ரஞ்சித் மற்றும் அவரது உறவினர்கள் 3 பேர் சேர்ந்து முரளி, அவரது மனைவி ரேவதி, சகோதரி இந்திராணி ஆகியோரை நேற்று முன்தினம் தாக்கியுள்ளனர். இதில் முரளி படுகாயமடைந்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் முரளி குடும்பத்தினரை தாக்கிய 3 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி லட்சுமிபுரத்தில் தேனி-பெரியகுளம் சாலையில் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பெரியகுளத்தை சேர்ந்த அஜித்குமார்(வயது 20), சுரேந்தர்(20) ஆகிய இருவரும் சாலைமறியல் நடைபெற்றதை செல்போனில் படம் எடுத்துள்ளனர். இதை மறியலில் ஈடுபட்டவர்கள் பார்த்து அவர்களை சரமாரியாக தாக்கினர். அப்போது போலீசார் அந்த 2 வாலிபர்களையும் மீட்டு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் இருவரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் பெரியகுளம் தென்கரை இந்திராபுரி தெருவை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மாலை 6 மணியளவில் வாலிபர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பெரியகுளத்தில் உள்ள தேனி சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் சாலைமறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து சுமார் 30 நிமிடம் பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்