விருத்தாசலம் அருகே, குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

விருத்தாசலம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-13 22:45 GMT
பெண்ணாடம், 

விருத்தாசலம் அடுத்த அண்ணாநகர் 13-வது வார்டில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது. இதனால் அவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் குடி நீருக்காக அருகில் உள்ள கிராம பகுதிகளுக்கும், விளை நிலங்களுக்கும் சென்று குடிநீர் பிடித்து வந்தனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில், விருத்தாசலம்-காட்டுக்கூடலூர் சாலையில் அண்ணாநகர் பஸ்நிறுத்தம் அருகே காலிகுடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தங்களுக்கு சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்