சாவில் சந்தேகம் உள்ளதாக போலீசில் மனைவி புகார், தொழிலாளியின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை - பிரம்மதேசம் அருகே பரபரப்பு

பிரம்மதேசம் அருகே மர்மமான முறையில் இறந்த தொழிலாளியின் சாவில் சந்தேகம் உள்ளதாக மனைவி கொடுத்த புகாரின்பேரில் அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

Update: 2019-06-13 22:30 GMT
பிரம்மதேசம்,

பிரம்மதேசம் அருகே உள்ள முன்னூர் காலனியை சேர்ந்தவர் கோலாஸ்(வயது 48), கூலி தொழிலாளி. இவருக்கு சவரியம்மாள்(39) என்ற மனைவியும், சுகந்தா(20), ரீட்டா(14) என்ற 2 மகள்களும், சீமோன்(18) என்ற ஒரு மகனும் உள்ளனர். இவர் கடந்த 23-ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. மறுநாள் கோலாஸ் அதேஊரில் உள்ள சவுக்கு தோப்பில் ஒரு மரத்தில் மர்மமான முறையில் பிணமாக தொங்கினார். இதையறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் கோலாசின் உடலை அதேஊரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்துவிட்டனர்.

இந்த நிலையில் சவரியம்மாள் பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த புகாரில் தனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருக்க மாட்டார் என்றும், அவரை யாராவது? அடித்துக் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டிருக்கலாம். எனது கணவர் சாவில் எனக்கு சந்தேகம் உள்ளது என்று குறிப்பிட்டிருந்தார்.

அதன்அடிப்படையில் பிரம்மதேசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜி, மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில் புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனை டாக்டர் சஞ்சய்குமார் தலைமையிலான மருத்துவகுழுவினர் கோலாசின் உடலை தோண்டி எடுத்து, அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்தனர். இதையடுத்து கோலாசின் உடல் அதேஇடத்தில் மீண்டும் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்