எட்டயபுரம் அரசு பெண்கள் பள்ளியில், ரூ.2.64 கோடி செலவில் புதிய வகுப்பறைகள் - ஆய்வகம்

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.2.64 கோடி செலவில் கட்டப்பட்ட 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

Update: 2019-06-13 23:00 GMT
எட்டயபுரம்,

எட்டயபுரம் பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ், ரூ.2 கோடியே 64 லட்சம் செலவில் கூடுதலாக 19 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகம் புதிதாக கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் புதிய வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகத்தை திறந்து வைத்தார்.

எட்டயபுரத்தில் நடந்த விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், சின்னப்பன் எம்.எல்.ஏ. ஆகியோர் புதிய வகுப்பறை கட்டிடத்தில் குத்துவிளக்கு ஏற்றி பேசினர். விழாவில் எட்டயபுரம் தாசில்தார் வதனாள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் ஆழ்வார் உதயகுமார், தலைமை ஆசிரியை அனிதா மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாணவி நந்தினி நன்றி கூறினார்.

இதேபோன்று தூத்துக்குடி பெரியசாமிபுரத்தில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ரூ.1 கோடியே 11 லட்சம் செலவில் கட்டப்பட்ட மாணவர் விடுதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்