அரக்கோணத்தில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நூதன போராட்டம்

அரக்கோணத்தில் டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-14 22:15 GMT
அரக்கோணம், 

கொல்கத்தா அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த டாக்டர் ஒருவர், பொதுமக்களால் தாக்கப்பட்டார். இதை கண்டித்து இந்திய மருத்துவ சங்கம் அரக்கோணம் கிளை சார்பில் டாக்டர்கள் தலையில் காயம் அடைந்தது போல் கட்டு போட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து நூதன முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்துக்கு சங்க தலைவர் டாக்டர் சுந்தர் தலைமை தாங்கினார். பொருளாளர் டாக்டர் சந்திரமவுலி முன்னிலை வகித்தார். செயலாளர் டாக்டர் கே.நாகராஜ் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக டாக்டர்கள் ஏ.ராதாகிருஷ்ணன், கே.ராவணன், என்.ராதாகிருஷ்ணன், நித்யாமணிகண்டன், சுந்தரவடிவேல், பொன்னம்பலம், செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். இதில் டாக்டர்கள் பூஷ்ணாபிரகாஷ், பாஷா, கவுஸ்அகமது, கண்ணன், கணேசன், குமரன், திலீபன், கிருஷ்ணமூர்த்தி, அன்புகுமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் சங்க நிர்வாகிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளை டாக்டர்கள் முழுமையாக சிகிச்சை அளித்து வருகின்றனர். அதில் சில நேரங்களில் சிகிச்சை பலனின்றி சிலர் இறந்து விடுகின்றனர். அவ்வாறு இறந்து போகும் நோயாளியின் உறவினர்கள் உடனடியாக டாக்டர்களை கண் மூடித்தனமாக தாக்கி விடுகின்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள் தாக்கப்படுவது மிகவும் வன்மையாக கண்டிக்கதக்கதாகும்.

டாக்டர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். டாக்டர்கள் பாதுகாப்பிற்காக மாநில அளவில் இருக்கும் சட்டத்தை கடுமையாக்க வேண்டும். மேலும் தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். அந்த சட்டத்தில் டாக்டர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் தண்டனை பெற்று தரும் வகையில் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் தாக்குதல் நடத்துவதால் டாக்டர்கள் நோயாளிகளின் உயிருக்கு முழுமையான சிகிச்சை அளிக்க முடியாத நிலை இருந்து வருகிறது. ஏனென்றால் மருத்துவமனையில் முதலில் தனக்கு முழுமையான பாதுகாப்பு உள்ளதா? என்பதை உறுதி செய்த பின்னர்தான் சிகிச்சை அளிக்க முடிகிறது.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் டாக்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் உள்ள போலீஸ் சாவடிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும். அவ்வாறு சாவடிகள் இல்லாத மருத்துவமனைகளில் உடனடியாக போலீஸ் சாவடிகளை ஏற்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்