நாமக்கல்லில் உலக ரத்த கொடையாளர்கள் தின விழிப்புணர்வு ஊர்வலம்

நாமக்கல்லில் உலக ரத்த கொடையாளர்கள் தினத்தையொட்டி நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. அதை சப்-கலெக்டர் கிராந்தி குமார் தொடங்கி வைத்தார்.

Update: 2019-06-14 22:30 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் சார்பில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14-ந் தேதி உலக ரத்த கொடையாளர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ரத்த கொடையாளர்கள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக நாமக்கல்லில் நேற்று ‘அனைவருக்கும் பாதுகாப்பான ரத்தம்’ என்ற குறிக்கோளை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

அரசு ஆஸ்பத்திரி இணை இயக்குனர் டாக்டர் செல்வகுமார், நிலைய மருத்துவ அலுவலர் கண்ணப்பன், மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் டாக்டர் அன்புமலர், டாக்டர்கள் சிவக்குமார், ஸ்ரீதேவி, மாவட்ட திட்ட மேலாளர் திருநாவுக்கரசு, நாமக்கல் தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் மருத்துவ அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

நாமக்கல் மாவட்ட தலைமை அரசு ஆஸ்பத்திரியில் தொடங்கிய ஊர்வலம் மோகனூர் சாலை, திருச்சி சாலை உள்பட நகரின் முக்கிய சாலைகள் வழியாக நடந்தது. பின்னர் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சென்றடைந்து முடிவுற்றது. இதில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி நடந்து சென்றனர்.

இதற்கிடையே நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு ரத்த வங்கிகளில் ரத்த கொடையாளர்கள் 6 ஆயிரத்து 987 யூனிட் ரத்தம் வழங்கி உள்ளதாக டாக்டர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்