கடியபட்டணம் அலை தடுப்பு சுவரை சீரமைக்க வலியுறுத்தி சாலை மறியலுக்கு முயற்சி

கடியபட்டணம் அலை தடுப்பு சுவரை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலுக்கு முயன்றனர். இது தொடர்பாக பிரின்ஸ் எம்.எல்.ஏ.வுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.

Update: 2019-06-15 23:00 GMT
மணவாளக்குறிச்சி,

குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் கடல் பகுதியில் சூறைக்காற்று வீசுவதுடன், ராட்சத அலைகள் எழுந்து மணற்பரப்பையும் தாண்டி விழுகிறது. சில தினங்களுக்கு முன் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் கடியபட்டணம் அந்தோணியார் தெருவில்  அலை தடுப்பு சுவர் சேதம் அடைந்தது. அலை தடுப்பு சுவரில் ஒரு பகுதி கடலில் விழுந்தது.

இதனால் அங்குள்ள 400 வீடுகளை கடல் நீர் சூழும் அபாயம் ஏற்பட்டது. எனவே மீனவர்கள் தங்கள் வீடுகளை சுற்றி மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் கடியபட்டணம்  கிராமத்தை பிரின்ஸ் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது கடியப்பட்டணம் அந்தோணியார் தெருவில் கடல் சீற்றத்திலிருந்து மீனவர்களை பாதுகாக்க சேதமடைந்த அலை தடுப்பு சுவரை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி 15–ந் தேதி (அதாவது நேற்று) மணவாளக்குறிச்சி சந்திப்பில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தார்.

இந்த நிலையில் நேற்று காலை அலை தடுப்பு சுவரை சீரமைக்க 2 டிப்பர் லாரிகளில் ராட்சத கற்கள் கொண்டு வந்து அந்தோணியார் தெருவில் இறக்கப்பட்டது. என்றாலும் சாலை மறியல் போராட்டம் நடத்த பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட பொதுமக்கள் அந்தோணியார் தெருவில் திரண்டனர்.

இதுபற்றி தகவலறிந்த கல்குளம் தாசில்தார் ராஜாசிங், கடியப்பட்டணம் கிராம நிர்வாக அதிகாரி பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் பிந்துகுமாரி, பொதுப்பணித்துறை கடலரிப்பு தடுப்பு பிரிவு உதவி செயற்பொறியாளர் இந்திராகாந்தி ஆகியோர் அங்கு விரைந்து வந்தனர். பிரின்ஸ் எம்.எல்.ஏ.வுடன் தாசில்தார் ராஜாசிங் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில் பங்குத்தந்தை பபியான்ஸ், ஊர் துணைத்தலைவர் பீட்டர் ராஜ், செயலாளர் பெர்னார்டு, துணை செயலாளர் எடிசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் தற்போது மாவட்ட கலெக்டர் அவசர கால நிதி ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் அலை தடுப்பு சுவர் சீரமைக்கப்படும். தொடர்ந்து நிரந்தர பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என தாசில்தார் உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

மேலும் செய்திகள்