விழுப்புரத்தில், குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

விழுப்புரம் ராகவன்பேட்டையில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-15 22:30 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் நகராட்சி 41-வது வார்டுக்குட்பட்ட ராகவன்பேட்டை பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நகராட்சி சார்பில் தினமும் குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு தடையின்றி வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 

இந்நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து வீடுகளுக்கு செல்லக்கூடிய குடிநீர் குழாய் இணைப்புகளில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வரவில்லை. இதனால் அவர்கள் போதுமான குடிநீர் கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தனர். இதையடுத்து நேற்று காலை நகராட்சி ஊழியர்கள், ராகவன்பேட்டை பகுதிக்கு சென்று பள்ளம் தோண்டி குடிநீர் குழாய் இணைப்பில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

பின்னர் நகராட்சி ஊழியர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக அப்பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவில் வளாகத்திற்கு சென்றனர். அங்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் குடிபோதையில், நகராட்சி ஊழியர்களை திட்டியுள்ளார். இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள், குடிநீர் குழாய் அடைப்பை சரிசெய்யும் பணியை பாதியிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து சென்றனர்.

நகராட்சி ஊழியர்கள், பணியை பாதியிலேயே விட்டுச்சென்றதால் குடிநீருக்காக அவதியடைந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து திடீரென மாலை 4 மணியளவில் ராகவன்பேட்டை பஸ் நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் திரண்டு வந்து குடிநீர் கேட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குடிநீர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வலியுறுத்தி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதன் காரணமாக விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து ஊழியர்களை வரவழைத்தனர். அதன்பேரில் அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள், தங்களை திட்டி தகராறில் ஈடுபட்ட வாலிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் முறையிட்டனர். அதற்கு விரைவில் நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறினர்.

இதனை ஏற்ற நகராட்சி ஊழியர்கள், தொடர்ந்து குடிநீர் குழாய் இணைப்புகளில் ஏற்பட்ட அடைப்புகளை சரிசெய்யும் பணியை மேற்கொண்டனர். அதன் பிறகு மாலை 4.30 மணியளவில் பொதுமக்கள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன் பிறகு போக்குவரத்து சீரானது.

மேலும் செய்திகள்