நாரணமங்கலம் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற பொதுமக்கள் நூதன வழிபாடு

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த மாதம் நடந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு திடீரென்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

Update: 2019-06-15 22:30 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவிலில் கடந்த மாதம் நடந்த திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டத்திற்கு திடீரென்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதனால் தேரோட்டம் நடைபெறவில்லை. இந்நிலையில் நாரணமங்கலம் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் எந்தவித பிரச்சினையும் இல்லாமல், சுமுகமாக நடைபெற வேண்டி, அந்த கிராம மக்களும், இந்து முன்னணி அமைப்பினரும் நேற்று பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவிலில் நூதன வழிபாடு நடத்த திரண்டனர். இதற்கு இந்து முன்னணி அமைப்பின் பெரம்பலூர் நகர செயலாளர் விஜய் பிரசாந்த் தலைமை தாங்கினார். அப்போது செல்வ விநாயகருக்கு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நாரணமங்கலத்தை சேர்ந்த பொதுமக்களும், இந்து முன்னணியினரும் செல்லியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்று நூதன வழிபாடாக தங்கள் கையில் வைத்திருந்த அகல் விளக்குகளில் சூடம் ஏற்றி வழிபட்டனர். இதற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணியின் திருச்சி கோட்ட செயலாளர் குணசேகரன் சிறப்புரையாற்றினார். முடிவில் நாரணமங்கலம் கிளைதலைவர் அசோக் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்