தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் அதிகளவு மீன்கள் சிக்கின

தடைக்காலம் முடிந்து கடலுக்கு சென்ற மீனவர்களின் வலையில் மீன்கள் அதிகளவு சிக்கின. வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கிச் சென்றனர்.

Update: 2019-06-16 23:00 GMT
கோட்டைப்பட்டினம்,

மீன்களின் இனவிருத்திக்காக ஆண்டுதோறும் 60 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலத்தை மத்திய-மாநில அரசுகள் அமல் படுத்தி வருகின்றன. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல மாட்டார்கள். தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான மீன் பிடிதடைக்காலம் ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு தொடங்கியது.

தடைக்காலத்தில் படகுகளை பராமரித்தல், வலைகளை சரிசெய்தல் உள்ளிட்ட பணிகளை மீனவர்கள் செய்து வந்தனர். மீன்பிடி தடைக்காலம் நிறைவுபெற்றதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளத்தில் இருந்து சுமார் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் கடலில் வலை விரித்ததில் பல்வேறு வகையான மீன்கள், இறால்கள், நண்டுகள் சிக்கின. இதனால், நேற்று காலை மகிழ்ச்சியுடன் மீனவர்கள் கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய மீனவர்கள் தங்களது வலையில் சிக்கிய மீன்களை வகைப்படுத்தி விற்பனைக்காக ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளங்களில் உள்ள கடைகளுக்கு கொண்டு சென்றனர்.

அங்கு தாங்கள் பிடித்து வந்த மீன்களை கொட்டி வைத்தனர். மீன்களை வாங்கி செல்வதற்காக நேற்று முன் தினம் இரவில் இருந்தே உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் லாரி, சரக்கு ஆட்டோ ஆகியவற்றில் வந்து குவிய தொடங்கினர். இதேபோல ஆந்திரா, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வாகனங்களில் வந்து வந்திருந்தனர். இவர்கள் மீன்கள், நண்டுகள், இறால்கள் போன்றவற்றை போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதனால் நேற்று காலை முதல் கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி தளங்களில் மக்கள் கூட்டம் களை கட்டியிருந்தது.

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து நாங்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றோம். எங்களுக்கு அதிக அளவில் மீன்கள், இறால்கள் கிடைத்தன. இருப்பினும் நாங்கள் எதிர்பார்த்த அளவு விலை கிடைக்கவில்லை என்று கவலையுடன் கூறினர்.

மேலும் செய்திகள்