வாகன சோதனையின்போது நிற்காமல் சென்றதால் மோட்டார்சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில் வாலிபர் சாவு

வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது போலீசார் லத்தியை வீசியதில், தடுமாறி விழுந்த வாலிபர் பலியானார். இது தொடர்பாக போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-17 00:15 GMT
மதுரை,

மதுரை சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்தவர் விவேகானந்த குமார் (வயது 36). அதே பகுதியில் டயர் விற்பனை கடை நடத்தி வந்தார். இவரது கடையில் ராமானுஜபுரத்தை சேர்ந்த சரவணக்குமார் (28) என்பவர் வேலை பார்த்து வந்தார்.

இவர்கள் இருவரும் நேற்று முன் தினம் நள்ளிரவில் செல்லூர் பாலம் ஸ்டேஷன் ரோட்டில் இருந்து தைக்கால் தெரு வைகை ஆற்றுப்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மோட்டார்சைக்கிளை நிறுத்துமாறு கூறி மறித்துள்ளனர். ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார் தாங்கள் வைத்திருந்த லத்தியை மோட்டார் சைக்கிளை நோக்கி வீசியுள்ளனர். அந்த லத்தி மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிள் கவிழ்ந்துவிட்டது.

இதில் அவர்கள் இருவரும் பின்நோக்கி விழுந்தனர். இதில் இருவரின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் நேற்று சிகிச்சை பலனின்றி விவேகானந்த குமார் பரிதாபமாக இறந்து விட்டார்.

இந்த தகவல் அறிந்ததும் விவேகானந்தகுமாரின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு கூடி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச்செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே விவேகானந்தகுமாருடன் சென்ற சரவணக்குமார் மதுரை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், “சாலையோரம் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் வேண்டுமென்றே எங்கள் மீது லத்தியை வீசினர். இதில் தடுமாறி கீழே விழுந்தோம். எனது கடை உரிமையாளர் விவேகானந்தகுமார் இறந்ததற்கு போலீசார் தான் காரணம். எனவே சம்பந்தப்பட்ட போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்த சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்