தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் கி.வீரமணி பேட்டி

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்று திருச்சியில் கி.வீரமணி கூறினார்.

Update: 2019-06-16 22:45 GMT
திருச்சி,

“தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். குடிநீர் பிரச்சினைக்காக அனைத்து கட்சி கூட்டத்தையோ அல்லது சட்டமன்றத்தையோ கூட்டி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்துகிற வகையில் செயல்பட வேண்டும். தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும். அமைச்சர்களும், முதல்-அமைச்சரும் இதில் ஈடுபாட்டுடன் செயல்பட வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்பதை மக்களுக்கு அரசு தெளிவுபடுத்த வேண்டும். பணம் கொடுத்தும் நல்ல தண்ணீரை கூட மக்கள் வாங்க முடியாத நிலை உள்ளது. தமிழகம் இதுவரை இது போன்ற வறட்சியை சந்தித்ததில்லை. இதில் அரசியல் பார்க்காமல், பொது பிரச்சினையாக கருதி மக்களின் தாகத்தை தீர்க்க வேண்டும்”.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அவரிடம் ராஜராஜ சோழன் பற்றி திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்த கருத்துகள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, கி.வீரமணி பதில் எதுவும் தெரிவிக்காமல் சென்று விட்டார்.

அதனை தொடர்ந்து புத்தூரில் ஒரு மண்டபத்தில் நடந்த திராவிடர் தொழிலாளர் அணி கலந்துரையாடல் கூட்டத்தில் கி.வீரமணி தலைமை தாங்கி பேசினார். திருவெறும்பூர் பாய்லர் ஆலை ஒப்பந்த தொழிலாளர்களின் பணியை நிரந்தரப்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வேண்டும். அரசு போக்குவரத்து கழகத்தில் 240 நாள் பணி முடித்த தினக்கூலி பணியாளர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஜெயக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்