தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகை

தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை துப்புரவு தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2019-06-17 23:00 GMT
திருச்சி,

துப்புரவு தொழிலாளர்களுக்கான தினக்கூலியை உயர்த்தி வழங்கக்கோரி துப் புரவு தொழிலாளர் சங்கம் (சி.ஐடி.யு.) சார்பில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்கும் போராட்டம் நேற்று நடந்தது. இதற்காக மாநகராட்சியில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள் நேற்று காலை மாநகராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

அப்போது, அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரசு ஆணைப்படி துப்புரவு தொழிலாளர்களுக்கான தினக்கூலி ரூ.625-ஐ உடனே வழங்கிட வேண்டும். மாநகராட்சி அதிகாரிகளுக்கு பிரதி மாதம் 1-ந் தேதி சம்பளம் வழங்குவதைபோல் துப்புரவு தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும். பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய நவீன எந்திர ரோபோக்களை பயன்படுத்த வேண்டும். நுண்உரம் கிடங்கில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை வழங்கிட வேண்டும். தொழிற்சங்கத்தில் சேர்ந்தால் வேலையை விட்டு நிறுத்திவிடுவேன் என்று துப்புரவு தொழிலாளர்களை மிரட்டும் ஒப்பந்ததாரர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.

பின்னர், தங்கள் கோரிக்கைகள் குறித்த மனுவை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் வழங்கினர். இதையொட்டி அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்