தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் 5-ந்தேதி ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 5-ந்தேதி கூட்டுறவு ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது என்று சங்க தலைவர் கு.பாலகிரு‌‌ஷ்ணன் தெரிவித்தார்.

Update: 2019-06-17 23:00 GMT
தர்மபுரி,

தமிழ்நாடு அரசு ரே‌‌ஷன்ககடை பணியாளர் சங்க மாநில பிரதிநிதிகள் மாநாடு தர்மபுரியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். அரசு பணியாளர் சங்க மாநில பிரசார செயலாளர் சுகமதி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் தனசேகர் மற்றும் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

நுகர்பொருள் வாணிப கழக ரே‌‌ஷன் கடை பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை, கூட்டுறவுத்துறை ரேசன் கடை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும். 4000 பணியாளர்களுக்கு பணி வரன்முறை செய்ய வேண்டும். ரே‌‌ஷன் பொருட்களை சரியான எடையில் பொட்டலங்களாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட காப்பீட்டு தொகை, வருங்கால வைப்பு நிதி, கடனுக்கு செலுத்திய தொகை ஆகியவற்றை சரியாக வரவு-செலவு செய்யாத நிலை உள்ளது. இதுதொடர்பாக அமைக்கப்பட்ட குழு, தனது அறிக்கையை அரசிடம் வழங்கிய நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

போராட்டம்

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல் கட்டமாக வருகிற ஜூலை மாதம் 5-ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டமும், 25-ந்தேதி ஊர்வலமும் நடத்தப்படும். ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எங்கள் சங்க நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும். வருகிற 23-ந்தேதி நடக்க உள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்தில் எங்கள் சங்கத்தினர் பங்கேற்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்