மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், ரூ.60¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏழைகளுக்கு ரூ.60¾ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.

Update: 2019-06-17 22:30 GMT
நெல்லை,

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ‌ஷில்பா தலைமையில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினார்கள். மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களிடம் பிளாஸ்டிக் பைகள் ஒழிப்பு மற்றும் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும் என கலெக்டர் ‌ஷில்பா விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த கூட்டத்தில், கடல் கடந்த இந்தியர் இழப்பீட்டு தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், வெளிநாட்டில் மரணம் அடைந்த கடையநல்லூர் அருகே உள்ள குமந்தாபுரத்தை சேர்ந்த ரமே‌‌ஷ் திருமலைக்குமாரின், தாய் ராமலட்சுமிக்கு ரூ.53 லட்சத்து 39 ஆயிரத்து 827-த்திற்கான காசோலையினையும், கூடங்குளத்தில் இறந்தவரின் வாரிசு பரமேசுவரிக்கு ரூ.4 லட்சத்து 36 ஆயிரத்து 272-த்திற்கான காசோலையினையும், மாவட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் ஆய்குடி சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்த சுடலிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், செட்டிகுளத்தை சேர்ந்த சகாயமேரிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், எலிசபெத்ராணிக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும் கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.

பாளையங்கோட்டை தாலுகா முத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து, பணியிடைக்காலத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த மாரியம்மாளுக்கு ஊர்நல அலுவலர் பணி நியமனத்திற்கான ஆணையையும் கலெக்டர் ‌ஷில்பா வழங்கினார்.

இதைத்தொடர்ந்து முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை கலெக்டர் ‌ஷில்பா வாசிக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.

மேலும் செய்திகள்