அலங்கியத்தில் 2 மூடை மாத்திரைகள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு

அலங்கியத்தில் 2 மூடை மாத்திரைகள் குப்பையில் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Update: 2019-06-17 22:45 GMT

தாராபுரம்,

தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் ஆற்றுப்பாலம் பகுதியில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு இடுகாடு உள்ளது. இந்த இடுகாட்டின் சுற்றுச்சுவர் அருகே நேற்று மாலை சிலர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த குப்பையில் 2 சாக்கு மூடைகள் கிடப்பதை பார்த்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் அந்த மூடைகளை பிரித்து கொட்டிப்பார்த்தபோது, அரசு முத்திரை பதித்த மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இது குறித்து வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது குப்பையில் கொட்டப்பட்ட அரசு மாத்திரைகளில், 80 சதவீத மாத்திரைகள் காலாவதியாகாதவை என்பது தெரியவந்தது.

அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக சப்–கலெக்டர் பவன்குமாருக்கு தகவல் கொடுத்தார்கள். பின்னர் குப்பையில் வீசப்பட்ட அரசு மாத்திரைகள் எந்த ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டது. சிகிச்சைக்காக வழங்கப்பட்ட அரசு மாத்திரைகளை, அனுமதியின்றி வெளியில் எடுத்துவந்து, குப்பையில் கொட்டியது யார் என்பதை கண்டறிந்து விசாரணை நடத்தவும், குப்பையிலிருந்து மீட்கப்பட்ட அனைத்து மாத்திரைகளையும், அலங்கியத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைக்குமாறு அதிகாரிகளுக்கு சப்–கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்படி வருவாய்துறை அதிகாரிகள் குப்பையில் கிடந்த அனைத்து மாத்திரைகளையும் எடுத்துச்சென்று அலங்கியம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். விலை உயர்ந்த அரசு மாத்திரைகள் குப்பையில் கொட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்