புதுவையில் ஜிப்மர், மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம்; நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

புதுவையில் ஜிப்மர், மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Update: 2019-06-18 00:15 GMT

புதுச்சேரி,

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 2 பயிற்சி டாக்டர்களை நோயாளிகளின் உறவினர்கள் தாக்கினார்கள். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மேற்கு வங்கத்தில் அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றி வரும் டாக்டர்கள் கடந்த 11–ந் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக இந்திய மருத்துவ சங்கம் சார்பில் நாடு முழுவதும் கடந்த 14–ந் தேதி முதல் போராட்டம் நடத்தப்பட்டது. புதுவை மாநிலத்திலும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இதே போல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வெளிப்புற சிகிச்சை பிரிவு செயல்படவில்லை. நேற்று நடைபெறுவதாக இருந்த அறுவை சிகிச்சைகள் மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கப்பட்டது. ஜிப்மர் மருத்துவமனை முன்பு நேற்று காலை திரண்ட டாக்டர்கள் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும். நாடு முழுக்க மருத்துவமனைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். அவசர சிகிச்சை பிரிவிற்கு உள்ளேயே போலீஸ் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோ‌ஷங்கள் எழுப்பினர். அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு எந்த தடையும் இன்றி செயல்பட்டு வந்தது.

ஜிப்மர் மருத்துவமனைக்கு பெரும்பாலும் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் நாள்தோறும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். நேற்று காலை வழக்கம் போல் அவர்கள் அங்கு வந்தனர். ஆனால் வெளிநோயாளிகள் சிகிச்சை பிரிவு மூடிக்கிடந்ததை பார்த்த உடன் சிகிச்சை பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் அங்கு பணியில் இருந்த காவலாளிகளிடம் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு ஏன் மூடப்பட்டுள்ளது? இன்று(நேற்று) திறக்கப்படுமா? என்று விசாரித்தனர்.

அப்போது காவலாளிகள் இன்று(நேற்று) புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு திறக்கப்படமாட்டாது. டாக்டர்கள் போராட்டத்தில் உள்ளனர் என்று கூறினர். இதனால் அவர்கள் மனவேதனையுடன் திரும்பிச் சென்றனர். ஒரு சிலர் காவலாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். டாக்டர்கள் போராட்டத்தையொட்டி புதுவை அரசு, ஜிப்மர் மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதே போல் புதுவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் நேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். காலை 8 மணியளவில் அவர்கள் தங்கள் பணிகளை புறக்கணித்து மருத்துவமனைகள் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு இந்திய மருத்துவ சங்கத்தின் புதுவை கிளை தலைவர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரமேஷ் மற்றும் டாக்டர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு பணிக்கு திரும்பி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து சிகிச்சை பிரிவுகளும் நேற்று வழக்கம் போல் இயங்கின. இதே போல் ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பும் டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

இதே போல் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி டாக்டர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். ஆனால் அவசர சிகிச்சை, அவசர அறுவை சிகிச்சை மற்றும் உள்ளிருப்பு சிகிச்சை பிரிவு மட்டும் வழங்கம் போல் செயல்பட்டு வந்தது. புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படவில்லை.

நேற்று காலை கல்லூரி நுழைவாயில் முன்பு டாக்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். இதில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் மகாதேவன், டீன் டாக்டர் ரத்தினசாமி, பொது மேலாளர் சவுந்தரராஜன், துணை மருத்துவ கண்காணிப்பாளர், துணை முதல்வர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

புதுவையில் தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மருத்துவ மனைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு மட்டும் செயல்பட்டது. அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. புறநோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்படவில்லை. புதுவையில் 30க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட டாக்டர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்