சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு: தஞ்சையில், பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தஞ்சையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-06-18 22:00 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாநகரில் 14 இடங்களில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை சுந்தரம்நகர் விரிவாக்க பகுதியில் உள்ள சாந்திவனம் என்ற சுடுகாட்டில் அப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் மையத்திற்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நகர்நல சங்கங்களின் நிர்வாகிகள் நேற்று காலை ஒன்று கூடி முன்னாள் நகரசபை தலைவர் இறைவன் தலைமையில் சாந்திவனம் சுடுகாட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அப்போது சுடுகாட்டில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்கக்கூடாது என கோஷங்கள் எழுப்பினர்.

இது குறித்து முன்னாள் நகரசபை தலைவர் இறைவன் கூறும்போது, விரிவாக்க பகுதியில் யாராவது இறந்தால் 15 கிலோமீட்டர் தூரமுள்ள ராஜாகோரி சுடுகாட்டிற்கு உடலை கொண்டு செல்ல வேண்டும். இது சிரமமாக இருக்கிறது என கூறி 1971-ம் ஆண்டு நீலகிரி, மேலவெளி ஊராட்சி பகுதிகளுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

தஞ்சை மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இவற்றில் 36 முதல் 41 வார்டுகளில் உள்ள 80 குடியிருப்பு நலச்சங்கங்கள் ஒன்றிணைந்து சாந்திவனம் என்ற இந்த சுடுகாட்டை உருவாக்கினோம். இதில் மும்மதத்தை சேர்ந்தவர்களும் உடல் தகனம், அடக்கம் செய்ய தனித்தனியாக இடவசதி உள்ளது. இந்த இடத்தில் குப்பைகள் தரம் பிரிக்கும் மையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதை வன்மையாக கண்டிப்பதோடு கட்டுமான பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்