கடலூரில், முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின் மோட்டார்கள் பறிமுதல்; அலுவலர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

கடலூரில், முறைகேடாக குடிநீர் உறிஞ்ச பயன்படுத்திய 15 மின் மோட்டார்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். அப்போது அவர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-18 22:30 GMT

கடலூர்,

கடலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முறைகேடாக சிலர் மின் மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி பயன்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று நகராட்சி உதவி பொறியாளர் ஜெயபிரகாஷ் நாராயணன், அலுவலர்கள் தாமோதரன், முருகவேல், கிருஷ்ணமூர்த்தி, மணி ஆகியோர் புதுப்பாளையம் பாலாஜிநகர், லெட்சுமிநகர் ஆகிய பகுதிகளுக்கு நேற்று திடீரென சென்று வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.

அப்போது அந்த பகுதியில் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்து, மின் மோட்டார் மூலம் குடி நீரை உறிஞ்சி பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பகுதிகளில் உள்ள 15 மின் மோட்டார்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நகராட்சி அலுவலர்களுடன் கடும் வாக்குவாதம் செய் தனர். அப்போது அவர்களுக்கு இடையே தள்ளு–முள்ளு ஏற்பட்டது. இதற்கிடையே சிலர் தங்கள் வீடுகளில் உள்ள மின் மோட்டார்களை தாங்களே அலுவலர்களுக்கு தெரியாமல் அகற்றினர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் அப்பகுதி மக்களிடம், அரசு அலுவலர்களை பணி செய்யவிடாமல் தடுத்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்