மதுரையில் பட்டப்பகலில் பயங்கரம்: பஸ் நிலையத்தில் வாலிபர் படுகொலை

மதுரை புதூர் பஸ் நிலையத்தில் பட்டப்பகலில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். அவரை சுற்றி வளைத்து வெட்டிச்சாய்த்துவிட்டு தப்பி ஓடிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-06-19 00:00 GMT
புதூர்,

மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவா் கந்தசாமி. அவருடைய மகன் ஆறுமுகம் (வயது 22). இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக நேற்று காலை புதூர் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வந்தார்.

அங்கு கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த ஆறுமுகம், புதூர் பஸ் நிலையத்துக்கு வந்்தார். அங்கு ஒரு கடையில் நின்றிருந்தார். பஸ் நிலையத்திலும் ஏராளமானோர் நின்றிருந்தனர்.

பின்னர் அங்கிருந்து அவர் புறப்பட்ட போது, ஒரு கும்பல் திடீரென்று பயங்கர ஆயுதங்களால் கண் இமைக்கும் நேரத்தில் ஆறுமுகத்தை அரிவாளால் வெட்டியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரித்து கொண்டு, உயிரை காப்பாற்றுவதற்காக அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால், அவரை சுற்றி வளைத்து மீண்டும் சரமாரியாக வெட்டினர். பின்னர் அந்த கும்பலை ேசர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

இந்த பயங்கர சம்பவத்தால் அந்த பகுதியில் நின்றிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். ரத்த வெள்ளத்தில் நிலைகுைலந்து விழுந்த ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே சற்று நேரத்தில் பரிதாபமாக இறந்தார்.

பொதுமக்கள் மிகுந்த இடத்தில் பட்டப்பகலில் நடந்த இந்த பயங்கர கொலை குறித்து தகவல் அறிந்த புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் ஆறுமுகத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலைக்கான பின்னணி என்ன? என்பதை அறிய போலீசார் விசாரணையை ெதாடங்கினர்.

ஆறுமுகத்துக்கும், அவரை வெட்டிக் கொன்ற கும்பலுக்கும் இடையே முன்விரோதம் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தினேஷ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆறுமுகத்தின் நெருங்கிய உறவினரும் சம்பந்தப்பட்டு இருந்தார்.

இதனால் பழிக்குப்பழியாக தினேஷின் ஆதரவாளர்கள் தற்போது ஆறுமுகத்தை கொன்று இருக்கலாம் என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக புதூர் பகுதியை சோ்ந்த பாலமுருகன்(28) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றவர்களும் விரைவில் பிடிபடுவார்கள் என்றும், இதற்காக இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

கொலை நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்