நாகர்கோவிலில் மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியது, கட்டிட தொழிலாளி மனைவியுடன் சாவு

மோட்டார் சைக்கிள் மீது தண்ணீர் லாரி மோதியது. இதில் கட்டிட தொழிலாளி மனைவியுடன் பலியானார். தம்பியின் திருமணத்துக்கு வங்கியில் பணம் எடுக்க சென்ற போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. நாகர்கோவிலில் நடந்த இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

Update: 2019-06-18 22:30 GMT
நாகர்கோவில்,

குமரி மாவட்டம் சுசீந்திரத்தை அடுத்த தேரூர் தபால் நிலைய தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34), கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி மீனாசெல்வி (21). இவர்களுக்கு 1½ வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

மணிகண்டனின் தம்பிக்கு நாளை (வியாழக்கிழமை) திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை மணிகண்டன்தான் முன்னின்று செய்து வந்தார். அதற்காக செலவுக்கு பணம் தேவைபட்டது. உடனே மணிகண்டன் நாகர்கோவில் வடசேரி பகுதியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிக்கு பணம் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் நேற்று காலை புறப்பட்டார். அப்போது தன்னுடைய மனைவி மீனாசெல்வியையும் அழைத்து வந்தார்.

தேரூரில் இருந்து ஒழுகினசேரி வழியாக வடசேரிக்கு வந்து கொண்டிருந்தனர். ஒழுகினசேரி- வடசேரி சாலையில் மாவட்ட பொது நூலகம் திருப்பம் அருகில் அவர்கள் சென்றபோது பின்னால் வந்த தண்ணீர் லாரி திடீரென எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட மணிகண்டனும், அவருடைய மனைவி மீனாசெல்வியும் சாலையில் விழுந்தனர். லாரியின் பின்சக்கரம் அவர்கள் மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் மணிகண்டன் தலைநசுங்கிய நிலையிலும், மீனாசெல்வி வலதுகால் தொடைப்பகுதி நசுங்கிய நிலையிலும் ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்தனர்.மோட்டார் சைக்கிள் முற்றிலும் சேதமடைந்தது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீனாசெல்வியை அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மணிகண்டனை ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டது. அதற்குள்ளாக அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயராஜன், சசிதரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட மீனாசெல்வியும் சிகிச்சை பலன் அளிக்காமல் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். கணவன்- மனைவியின் உடல்களைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் காண்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது.

விபத்து நடந்ததும் தண்ணீர் லாரி டிரைவர் தலைமறைவாகி விட்டார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வுப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பு பிரகாஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தம்பியின் திருமணம் நாளை நடைபெற இருந்த நிலையில் கட்டிட தொழிலாளி மனைவியுடன் பலியான சம்பவம் நாகர்கோவிலில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மேலும் செய்திகள்