திருவண்ணாமலை மாவட்ட செய்தி சிதறல், இளம்பெண் தீக்குளித்து தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

வந்தவாசி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2019-06-18 22:15 GMT
வந்தவாசி,

வந்தவாசி தாலுகா இரும்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 25), வேன் டிரைவர். இவரும், அதே கிராமத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (21) என்பவரும் காதலித்து கடந்த 15 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 3 மாதத்தில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி இருவருக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஐஸ்வர்யா மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார். இதில் தீக்காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி ஐஸ்வர்யாவின் தந்தை பழனி கீழ்கொடுங்காலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ஐஸ்வர்யாவுக்கு திருமணமாகி 15 மாதங்களே ஆவதால் செய்யாறு உதவி கலெக்டர் அன்னம்மாள் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

கலசபாக்கம் கிராமத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனுறை திருமாமுடீஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம் இரவு குருக்கள் பாபு பூஜையை முடித்து விட்டு கோவில் நடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். நேற்று காலை பாபு வழக்கம் போல் கோவிலின் கதவை திறந்து உள்ளே சென்ற போது சாமி சன்னதி முன்பு இருந்த உண்டியல் மற்றும் அம்மன் சன்னதியில் இருந்த உண்டியல்களின் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததையும், அம்மன் கழுத்தில் இருந்த தங்க தாலி இல்லாததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலசபாக்கம் போலீசார் கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கோவிலின் மதில் சுவர் ஒட்டி உள்ள வேப்பமரத்தின் மீது ஏறி உள்ளே குதித்து கோவில் ஜன்னல் கம்பியை அறுத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து திருடிச் சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செங்கத்தை அடுத்த சந்தகவுண்டன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (48), விவசாயி. இவர், மோட்டார் சைக்கிளில் செங்கம் நோக்கி சென்றார். அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென லாரியின் சக்கரத்தில் ஏழுமலை சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து செங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கத்தை அடுத்துள்ள தீத்தாண்டப்பட்டு பகுதியில் செங்கம் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மணல் கடத்தி வந்த டிராக்டரை மடக்கிப் பிடித்தனர். இதனையடுத்து போலீசார் டிராக்டரை ஓட்டி வந்த ராஜீவ்காந்தி (28) என்பவரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிராக்டரின் உரிமையாளரை தேடி வருகின்றனர்.

இதேபோல் திருவண்ணாமலை புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குனர் அஷ்வினி வாணாபுரம் பகுதியில் ரோந்து மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக மண் ஏற்றி வந்த லாரியை மடக்கி சோதனை செய்ததில் மண் கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் மண் கடத்தி வந்த லட்சுமணன் (23) என்பவரை கைது செய்தனர்.

செஞ்சி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சையத்சர்தார் (65). இவர், திருவண்ணாமலையில் நடந்த உறவினரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்கிருந்து அவர் மீண்டும் கிருஷ்ணாபுரம் செல்வதற்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். கீழ்பென்னாத்தூர் எம்.ஜி.ஆர். நகர் பைபாஸ் சாலை பகுதியில் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழந்தது. இதில் படுகாயம் அடைந்த சையத்சர்தார் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆரணி, ஆரணிப்பாளையம் புதுகாமூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (19) நேற்று பகலில் தருமராஜா கோவில் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இவர் கல்லூரியில் சேர விண்ணப்ப படிவம் பெற ரூ.500 கொண்டு சென்றார். அப்போது ஆரணிப்பாளையம், தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்த மணிகண்டன் (24) என்பவர் கத்தியை காட்டி அருண்குமாரிடம் இருந்து பணத்தை பறித்து கொண்டு ஓடினார். அப்போது எதிரே தடுக்க வந்தவரையும் தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.

இதுகுறித்து ஆரணிடவுன் போலீசில் அருண்குமார் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜமீஸ்பாபு வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார்.

கண்ணமங்கலம் அருகே அம்மாபாளையம் கூட்ரோட்டில் அதே பகுதியை சேர்ந்த மணி என்பவருக்கு சொந்தமான வாட்டர் சர்வீஸ் கடை உள்ளது. இந்த கடையில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து அங்கிருந்த ரூ.7 ஆயிரத்தை திருடி சென்று உள்ளனர்.

இதுகுறித்து கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்