ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4,700 வழக்குகள் பதிவு போலீசார் அதிரடி

வேலூர் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக ஒரு வாரத்தில் 4,700 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-06-19 22:15 GMT
வேலூர், 

இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஏற்படும் விபத்துகளில் உயிர்ப்பலி ஏற்படுவதை தடுக்க வாகனம் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து வருபவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும் ஒருசிலரே ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் ஓட்டுகிறார்கள்.

இந்த நிலையில் வேலூர் மாவட்டத்தில் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் அணியாமலும், போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்ய போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனை செய்தனர்.

கடந்த 9-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை 7 நாட்கள் நடத்திய வாகன சோதனையில் மொத்தம் 6,999 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 4,701 பேர் மீதும், பின்னால் அமர்ந்து வந்த 80 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக 10 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டியதாக 430 பேர் மீதும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக 150 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று 1,628 பேர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்