மயிலாடுதுறை அருகே மொபட்டில் கடத்தப்பட்ட 350 மதுபாட்டில்கள் பறிமுதல் வாலிபர் கைது

மயிலாடுதுறை அருகே மொபட்டில் 350 மதுபாட்டில்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-19 22:45 GMT
குத்தாலம்,

நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த உக்கடை நண்டலாற்று பாலம் அருகே தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் போலீசாரின் பிடியில் சிக்கினார். பின்னர் போலீசார், மொபட்டை சோதனை செய்தனர்.

அப்போது ஒரு சாக்கு மூட்டையில் மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. உடனே போலீசார், 350 மதுபாட்டில்கள் மற்றும் மொபட்டை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், மதுப்பாட்டில்களை விற்பனைக்காக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதிக்கு கொண்டு சென்றது தெரியவந்தது.

மேலும் மதுபாட்டில்களை கடத்தி சென்றது உடையார்பாளையம் காட்டாகரம் மண்டபத்தெருவை சேர்ந்த பூராசாமி மகன் திருநாவுக்கரசு (வயது 34), அதே பகுதியை சேர்ந்த சின்னப்பிள்ளை மகன் சுரேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார், பறிமுதல் செய்த மதுபாட்டில்களையும், மொபட்டையும் பெரம்பூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசை கைது செய்தனர். மேலும் வழக்கு தொடர்பாக தப்பி ஓடிய சுரேசை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்