தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைப்பு கலெக்டர் அண்ணாதுரை தகவல்

தொழிலாளர்களின் ஓய்வூதியத் தொகை அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்தார்.

Update: 2019-06-19 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் நலவாரியம் மற்றும் அதை சார்ந்த 14 நல வாரியங்களில் பதிவு பெற்று ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்களுக்கு மாதாந்திர ஒய்வூதியத் தொகை வழங்க ஏதுவாக அரசிடம் இருந்து ஓய்வூதிய நிதி பெறப்பட்டுள்ளது.

தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பேராவூரணி, அதிராம்பட்டினம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஆடுதுறை, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள கைத்தறி நெசவு, உடலுழைப்பு, தையல், தெருவணிகம், பொற்கொல்லர், செருப்பு தைக்கும் தொழில், சலவைத்தொழில், முடிதிருத்தும் தொழில், மண்பாண்டம், வீட்டு பணி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள வாரிய உறுப்பினர்கள் அனைவருக்கும் கடந்த மாதங்களுக்கான நிலுவைத் தொகையுடன் சேர்த்து ஓய்வூதியத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.

சலுகைகள்

ஓய்வூதியம் பெற்று வரும் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று தொகையை பெற்று கொள்ளலாம். தஞ்சை தொழிலாளர் துறை உதவி ஆணையர்(சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகம் முலமாக ஓய்வூதியம் பெற்று வரும் 2,045 உடலுழைப்பு தொழிலாளர்களுக்கு தற்போது ஒய்வூதியத் தொகை பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

எனவே மேலே குறிப்பிட்டுள்ள தொழில்களில் ஈடுபட்டு வரும் 18 வயது முதல் 60 வயதிற்குட்பட்டவர்கள் தொடர்புடைய நலவாரியங்களில் உறுப்பினராக பதிவு செய்து கொண்டு அரசால் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு தொழிலாளர் துறை உதவி ஆணையர் அலுவலகம்(சமூக பாதுகாப்பு திட்டம்), ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை கட்டிட வளாகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தின் பின்புறம், திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலை, தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரில் செல்ல வேண்டும். இல்லையென்றால் 04362-264549 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்