டாஸ்மாக் பாரில் எலிக்கறி சமைத்து விற்பனை செய்யப்பட்டதா? உணவு பாதுகாப்புதுறை அதிகாரிகள் ஆய்வு

அறந்தாங்கி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் எலிக்கறியை சமைத்து வினியோகம் செய்யப்பட்டதா? என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2019-06-19 22:15 GMT
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் எலிக் கறியை, முயல் கறி என கூறி சமைத்து மது அருந்துபவர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக வாட்ஸ்-அப் உள்பட சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. அந்த வீடியோவில் அறந்தாங்கி அருகே உள்ள ஆயிங்குடி பகுதியில் ஒரு நபர் எலிகளை பிடித்து சுத்தம் செய்து அந்த கறியை அறந்தாங்கி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் விற்பனை செய்கிறார். அந்த கறியை பார் ஊழியர்கள் பெற்று சமைத்து முயல் கறி என கூறி எலிக்கறியை மது அருந்துவர்களுக்கு விற்பனை செய்வதாக அந்த வீடியோ முடிகிறது. அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து நேற்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு பார் இல்லை என்பதும், எலிக்கறி எதுவும் சமைத்து விற்பனை செய்யப்படவில்லை என்பது தெரிய வந்தது. இதுசம்பந்தமான வீடியோவை வெளியிட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தியபோது, ஆயிங்குடி கிராமத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர், தனது வயலில் எலி பிடிப்பதற்காக ஒரு சமூகத்தை சேர்ந்தவரை அழைத்துள்ளார்.

ஆனால், அவர் எலி பிடிக்க செல்லாமல் இருந்ததோடு அடுத்தவர் வயலில் பிடித்த எலிகளை சுத்தம் செய்து அதனை சாப்பிடுவதற்காக காய வைத்திருந்தார். தான் கூப்பிட்டும் சம்பந்தப்பட்ட நபர் வராததால் அவரை சிக்க வைப்பதற்காக அவர் காய வைத்திருந்த எலிகளை வீடியோ எடுத்து டாஸ்மாக் பாரில் விற்பனை செய்வது போல வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது தெரியவந்தது.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு கூறுகையில், தனது வயலில் எலி பிடிக்க வராத சம்பந்தப்பட்டவரை சிக்க வைப்பதற்காக சுரேஷ்குமார் வீடியோ பதிவிட்டுள்ளார். வீடியோவில் கூறப்பட்டுள்ள பெரியாளூர் மேற்பனைகாடு கிராமத்தில் எங்கள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் அந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை மட்டுமே இருப்பதும், பார் இல்லை என்பதும் தெரிய வந்தது என்றார். இதுகுறித்து அறந்தாங்கி போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்