வங்கி அதிகாரிகள் வைத்த சீல் அகற்றப்பட்ட விவகாரம்: அட்டை தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு

வங்கி அதிகாரிகள் வைத்த சீல் அகற்றப்பட்ட விவகாரத்தில், அட்டை தயாரிக்கும் நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2019-06-19 22:56 GMT
குன்னத்தூர்,

ஊத்துக்குளியில் உள்ள ஒரு வங்கியில் ரூ.5½ கோடி வாங்கிய கடனை திருப்பி செலுத்தாததால் அந்த நிறுவனத்தை பூட்டி வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த சீலை உடைத்த நிறுவன உரிமையாளர்கள் 3 பேர் மீது கோர்ட்டு உத்தரவுப் படி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் அருகே உள்ள பாலாஜிநகரை சேர்ந்தவர்கள் சந்திரன் (வயது 59), சக்திவேல் (57), மூர்த்தி (55). அண்ணன்-தம்பிகளான இவர்கள் 3 பேரும் சேர்ந்து பாலாஜி நகரில் ஸ்ரீசக்தி முருகன் பாலிமர்ஸ் (அட்டை தயாரிக்கும்) என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வந்தனர். இ்ந்த நிறுவனத்தை மேம்படுத்த அண்ணன்-தம்பிகள் 3 பேரும் சேர்ந்து ஊத்துக்குளி பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் ரூ.5 கோடியே 58 லட்சம் கடன் பெற்று இருந்தனர்.

இந்த கடனுக்கான வட்டியையும், அசலையும் அவர்கள் திருப்பி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வங்கியின் உயர் அதிகாரிகள் அந்தநிறுவனத்திற்கு சென்று நிறுவனத்தை பூட்டி சீல் வைத்தனர். பின்னர் நிறுவனத்திற்குள் யாரும் நுழைந்து விடாமல் இருக்க காவலாளி ஒருவரையும் வங்கி சார்பில் நியமித்தனர்.

ஆனால் சீல் வைத்த மறுநாள், அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான 3 பேரும் சேர்ந்து சீலை உடைத்து தொழில் செய்துள்ளனர். இது தொடர்பாக வங்கி மேலாளர் வினோத்குமார், அவினாசி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, ஸ்ரீசக்தி முருகன் பாலிமர்ஸ் நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய குன்னத்தூர் போலீசாருக்கு உத்தரவிட்டார். கோர்ட்டு உத்தரவுப் படி சந்திரன், சக்திவேல் மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்