திருப்பூர், பல்லடம், பொங்கலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 327 பேர் கைது

திருப்பூர், பல்லடம் மற்றும் பொங்கலூரில் சாலைமறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 327 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-19 23:30 GMT
திருப்பூர்,

தஞ்சாவூரில் நிர்மலா நகரில் விநாயகர் கோவில் கட்ட அனுமதிக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக தஞ்சாவூர் சென்ற இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியத்தை போலீசார் கைது செய்தனர்.

இதை கண்டித்து திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு நேற்று மாலை இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் சேவுகன் தலைமையில் மறியல் நடந்தது. சம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்து செங்குந்தர் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதுபோல் திருப்பூர் பு‌‌ஷ்பா ரவுண்டானா அருகில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினர் செந்தில்குமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 60 பேரை வடக்கு போலீசார் கைது செய்து காவேரியம்மன் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு இந்து முன்னணி மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. தெற்கு போலீசார் 10 பெண்கள் உள்பட 110 பேரை கைது செய்தனர். திருப்பூர் மாவட்ட அரசு ஆஸ்பத்திரி அருகே இந்து முன்னணி மாநகர தலைவர் சக்திவேல் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. மறியலில் ஈடுபட்ட 20 பேரை தெற்கு போலீசார் கைது செய்து அவர்களை கோட்டை மாரியம்மன் கோவில் மண்டபத்தில் தங்க வைத்தனர். மாநகரில் 4 இடங்களில் மறியலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 290 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் தங்க வைத்தனர்.

பல்லடம் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் 21 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொங்கலூரில் சாலை மறியலில் ஈடுபட்ட 16 பேரை போலீசார் கைது செய்தனர். அதன்படி மொத்தம் 327 பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களை போலீசார் அங்குள்ள மண்டபத்திற்கு அழைத்து சென்று தங்க வைத்தனர்.

மேலும் செய்திகள்