தான் படித்த அரசு பள்ளியில் மகனை சேர்த்த தாசில்தார் பொதுமக்கள் பாராட்டு

தான் படித்த அரசு பள்ளியிலேயே தனது மகனையும் சேர்த்துள்ளார் திருக்குவளை தாசில்தார். இவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

Update: 2019-06-20 23:00 GMT
வேதாரண்யம்,

ஒரு காலத்தில் அரசு பள்ளிக்கூடங்களை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையே இருந்தது. அதிலும் பெருந்தலைவர் காமராஜர் முதல்-அமைச்சராக இருந்தபோதுதான் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. வறுமையின் காரணமாக குழந்தைகள் பள்ளிக் கூடத்திற்கு வர முடியாத நிலைமை இருப்பதை உணர்ந்த பெருந்தலைவர் காமராஜர், பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்து ஏராளமான குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு வரவைத்தார். இதன் காரணமாக அரசு பள்ளிகளில் படித்த எத்தனையோ பேர் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர்ந்த பதவிகளுக்கு சென்றனர். காலப்போக்கில் ஆங்கில கல்வி மோகம், மக்களை ஆட்டுவித்தது. இதனால் படிக்காத பெற்றோர் கூட தங்களது குழந்தைகளை நன்கு படிக்க வைக்க வேண்டும், அதிலும் தங்கள் குழந்தைகள், வெள்ளைக்கார துரை போன்று நுனி நாக்கில் ஆங்கிலம் பேச வேண்டும் என்று விரும்பி கடனை வாங்கியும், இருக்கும் சொத்துக்களை விற்றும் தங்கள் குழந்தைகளை ஆங்கில வழி கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிக்கூடங்களில் சேர்த்து வருகின்றனர்.

தான் படித்த அரசு பள்ளியில்...

இந்த நிலையில் அரசு பள்ளியில் படித்து தமிழக அரசு பணியில் உயர்ந்த நிலைக்கு வந்த ஒருவர், தனது குழந்தையையும் அரசு பள்ளியிலேயே சேர்த்து உள்ளார் என்ற செய்தி கேள்விப்பட்டபோது முதலில் அதை நம்மால் நம்ப முடியவில்லை. அதுவும், தான் படித்த அதே அரசு பள்ளியில் தன் மகனை சேர்த்து உள்ளார் என்பதை பார்க்கும்போது அவர் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டியவர்தான் என்பதில் சிறிதளவும் அய்யமில்லை.

அவரை பற்றி இங்கே பார்ப்போமா!

திருக்குவளை தாசில்தார்

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவர், நாகை மாவட்டத்தில் உள்ள திருக்குவளையில் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். தனது ஆரம்ப கல்வியை வேதாரண்யம் வடமழைரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படித்த இவர், பின்னர் வேதாரண்யத்தில் உள்ள தாயுமானவர் வித்யாலயம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு வரை படித்தார்.

தொடர்ந்து 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வேதாரண்யம் சி.த.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த இவர், கல்லூரி படிப்பை திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கல்லூரியில் தொடங்கினார். அங்கு பி.ஏ. பட்டப்படிப்பு முடித்து விட்டு குரூப்-2 தேர்வு எழுதி வருவாய் ஆய்வாளராக பணியில் சேர்ந்த இவர் பின்னர் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். தற்போது திருக் குவளை தாசில்தாராக பணியாற்றி வருகிறார்.

பொதுமக்கள் பாராட்டு

தாசில்தாராக பணியாற்றி வரும் இவர், தான் படித்த வேதாரண்யம் வடமழைரஸ்தா ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலேயே தனது 5 வயது மகன் நன்நெறியாளனை சேர்த்துள்ளார்.

அந்தஸ்து, வசதி வாய்ப்பு ஆகியவை உயர்ந்தாலும் பழசை மறக்காமல் தனது மகனை அரசு பள்ளியில், அதுவும் தான் படித்த பள்ளியிலேயே சேர்த்து படிக்க வைக்கும் தாசில்தார் ரமேசுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரி தாமோதரன் மற்றும் ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்