பொள்ளாச்சியில் அடுத்தடுத்து சம்பவம், 4 வீடுகளில் நகை, பணம் திருட்டு - மின்தடையை பயன்படுத்தி கும்பல் கைவரிசை

பொள்ளாச்சியில் அடுத்தடுத்து 4 வீடுகளில் நகை, பணத்தை திருடிச்சென்றனர். மின்தடையை பயன்படுத்தி ஒரே கும்பலை சேர்ந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை காட்டி உள்ளனர்.

Update: 2019-06-20 22:15 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் முகமது அனிபா (வயது 48). பெயிண்டிங் காண்டிராக்டர். இவர் நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் உள்ளவர்களும் வெளியே சென்று விட்டனர். அவரது மகன் முகமது ஆசீப் மட்டும் வீட்டில் இருந்தார். மதிய வேளை ஆனதால் அவரும் சாப்பிடுவதற்காக ஓட்டுலுக்கு சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 12 பவுன் நகையை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இது போல் அவரது எதிர்வீட்டில் வசிப்பவர் நஞ்சயன் (66). ஓய்வு பெற்ற தனியார் கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி புனிதவதி. இவரது மகளுக்கு குழந்தை பிறந்ததால், மாக்கினாம்பட்டியில் உள்ள மகள் வீட்டுக்கு புனிதவதி சென்று விட்டார். நஞ்சயனும் கோவிலுக்கு சென்று விட்டார். பின்னர் அவர் திரும்பி வந்து பார்த்தபோது கதவை உடைத்து, பீரோவை திறந்து 3 பவுன்நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கம் திருட்டுபோனது தெரியவந்தது.

இதுபோல் அருகில் உள்ள லட்சுமி கணபதி நகரை சேர்ந்தவர் முபாரக் அலி. தனியார் கல்லூரிஊழியர். இவரும் நேற்று காலை தனது மனைவி, மற்றும் குழந்தைகளுடன் பொள்ளாச்சிக்கு சென்றார். பின்னர் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருட்டுபோனது. பொள்ளாச்சி-கோட்டூர் ரோட்டில் உள்ள ரெங்க சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் ஆசிரியர் யானை சேகர். இவர் பள்ளிக்கு சென்று விட்டார். வீட்டில் யாரும் இல்லை. இந்த நிலையில் வீட்டு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிச்சென்றனர். இந்த திருட்டில் ஒரே கும்பலை சேர்ந்த மர்ம ஆசாமிகள் தான் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும் பொள்ளாச்சி கிழக்கு, மற்றும் கோட்டூர் போலீசார் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்றனர். கைவிரல் ரேகை நிபுணர்களும், அங்கு சென்று பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் அடுத்தடுத்து வீடுகளில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. மின்தடை நேரத்தில் வீடுகள், மற்றும் வீதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் இயங்காததால், நேற்று மின்தடையை பயன்படுத்தி இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதுபோல் அந்த பகுதியில் கடந்த மாதத்தில் பல வீடுகளில் திருட்டு நடந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்