காப்பீட்டு தொகை வழங்கக்கோரி, சிறுபாக்கம் பஸ் நிலையத்தை விவசாயிகள் முற்றுகை

காப்பீட்டு தொகை வழங்கக்கோரி சிறுபாக்கம் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-06-23 22:15 GMT
சிறுபாக்கம்,

கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகாவில் உள்ள சிறுபாக்கம் குறுவட்டத்தை சேர்ந்த 35 கிராம விவசாயிகள் கடந்த 2016-17-ம் ஆண்டுக்கு பயிர் காப்பீடு செய்திருந்தனர். ஆனால் இதுவரை விவசாயிகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. மேலும் மத்திய அரசு சிறு குறு விவசாயிகளுக்கு படைப்புழு மானியத் தொகையும், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் முதற்கட்ட தொகையான ரூ.2 ஆயிரமும் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து வேளாண்மை துறை, வருவாய் துறை, காப்பீடு நிறுவனம் ஆகியவற்றிடம் விவசாயிகள் பலமுறை முறையிட்டும், காப்பீட்டு தொகையும், உதவித்தொகையும் வழங்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் துரைசாமி தலைமையில் சிறுபாக்கம் பஸ் நிலையத்துக்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள் பஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காப்பீட்டு தொகை மற்றும் படைப்புழு மானியத் தொகை வழங்க கோரி கோஷம் எழுப்பினர்.

சுமார் ஒரு மணி நேரம் போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால், விவசாயிகள் தாங்களாகவே போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். விவசாயிகளின் இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்