லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டர் வங்கி லாக்கரில் 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சம் பறிமுதல்

லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் இருந்த 190 பவுன் நகை, ரூ.19¼ லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Update: 2019-06-21 23:15 GMT
கிரு‌‌ஷ்ணகிரி, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் நடராஜன். இவர் கடந்த 22.5.2019 அன்று அந்த பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரிடம் லாட்டரி சீட்டு விற்றதாக வழக்குப்பதிவு செய்து விடுவதாக கூறி, வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க ரூ.70 ஆயிரம் லஞ்சம் கேட்டார். அந்த தொகையை கொடுக்க விரும்பாத சரவணன் கிரு‌‌ஷ்ணகிரியில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரைப்படி, ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.70 ஆயிரத்தை சரவணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்ஸ்பெக்டர் நடராஜனை கைது செய்தனர். கைதான இன்ஸ்பெக்டர் நடராஜனை தற்காலிக பணிஇடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜனின் வங்கி லாக்கரில் கிரு‌‌ஷ்ணகிரி லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு கிரு‌‌ஷ்ணராஜ், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். சேலத்தில் கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட ஒரு வங்கியில் அவரது லாக்கரில் இருந்து 150 பவுன் நகைகள், ரூ.14 லட்சத்து 30 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல சேலத்தில் உள்ள ஒரு வங்கியில் ரூ.5 லட்சம், 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தம் 190 பவுன் நகைகளையும், ரூ.19 லட்சத்து 30 ஆயிரத்தையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்