கிளியனூர் அருகே வாகன சோதனை: மது பாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது

புதுவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-21 22:55 GMT

வானூர்,

புதுவையில் இருந்து தமிழக பகுதிக்கு மதுபாட்டில்கள் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க புதுச்சேரி – கடலூர், புதுச்சேரி – விழுப்புரம், திண்டிவனம் சாலை, கிழக்கு கடற்கரை சாலைகளில் மதுவிலக்கு சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கிளியனூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் பாபு, தனி பிரிவு ராஜாராம் மற்றும் போலீசார் கூத்தப்பாக்கம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது புதுவையில் இருந்து திண்டிவனம் நோக்கி சென்ற இருசக்கரவாகனத்தை வழிமறித்து சோதனை செய்தனர். அதில் 10 அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அட்டை பெட்டிகளில் இருந்த 100 மதுபாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் திண்டிவனம் அடுத்த மொளச்சூர் சக்தி(வயது20), ராமானுஜம்(25) என்பதும், புதுவையில் இருந்து மதுபாட்டில்களை கடத்திச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மதுபாட்டில்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.இதன் மொத்த மதிப்பு ரூ.90 ஆயிரம் ஆகும்.

மேலும் செய்திகள்