முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்து பெண் ரகளை

புதுவை முதலியார்பேட்டை போலீஸ் அருகே குடிபோதையில் நடுரோட்டில் அமர்ந்து ரகளை செய்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-21 23:15 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி முதலியார்பேட்டை போலீஸ் நிலையம் அருகே நேற்று இரவு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் திடீரென நடு ரோட்டில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதையடுத்து அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும் சேர்ந்து அந்த பெண்ணிடம் சாலையின் நடுவே அமர்ந்து போக்குவரத்துக்கு ஏன் இடையூறு செய்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு அந்த பெண் கேள்வி கேட்டவர்கள் அனைவரையும் தகாத வார்த்தைகளால் திட்டினார். அப்போதுதான் அந்த பெண் குடிபோதையில் இருப்பது தெரியவந்தது. எனவே அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் முதலியார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து போலீசார் அங்கு வந்து அந்த பெண்ணை அங்கிருந்து எழுந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் போலீசாரின் எச்சரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை. அதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதியை சேர்ந்த சில பெண்களை அழைத்து வந்து ரகளையில் ஈடுபட்ட பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களின் முயற்சியும் தோல்வியில் முடிந்தது. பின்னர் அந்த பெண்ணிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பின்னர் அவரை சமாதானம் செய்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

அப்போது அவர்மிதமிஞ்சிய குடிபோதையில் இருந்ததால் அவர் தன்னுடைய பெயர் மற்றும் ஊரை மாற்றி மாற்றி கூறினார். மேலும் தனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. பிள்ளைகள் இல்லை என தொடர்ந்து புலம்பினார். இதனால் போலீசார் பெரும் குழப்பம் அடைந்தனர்.

இந்த சம்பவம் காரணமாக முதலியார்பேட்டையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்