வக்கீல் வீட்டில் தீவிபத்து; ரூ.5 லட்சம் பொருட்கள் நாசம் மர்மநபர்கள் தீவைத்தார்களா? போலீசார் விசாரணை

நாகையில் வக்கீல் வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மர்மநபர்கள் வீட்டிற்கு தீவைத்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-06-22 23:00 GMT
நாகப்பட்டினம்,

நாகை சிவன் சன்னதி தெருவை சேர்ந்தவர் நடேச.ஜெயராமன் வயது (வயது70). இவர் நாகை மாவட்ட நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். மேலும் மாவட்ட நீதிமன்ற வக்கீல்கள் சங்க தலைவராகவும் உள்ளார். இந்தநிலையில் நேற்று அதிகாலை நடேச.ஜெயராமன் வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ வீட்டின் முன்பு உள்ள வக்கீல் அலுவலகம் மற்றும் மாட்டு கொட்டகைக்கும் பரவியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனே இதுகுறித்து நாகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். ஆனாலும் தீவிபத்தில் வீட்டில் இருந்த பணம், நகைகள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள், கோப்புகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. இதன் சேதமதிப்பு ரூ. 5 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து நாகை வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வக்கீல் நடேச.ஜெயராமன் வீட்டிற்கு முன் விரோதம் காரணமாகவோ? அல்லது வழக்கு தொடர்பான காரணமாகவோ? யாராவது மர்மநபர்கள் தீவைத்தார்களா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அருகில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்