மாநகராட்சி குப்பைக்கிடங்கில் தீவிபத்து: தஞ்சை நகருக்குள் புகை பரவியதால் மக்கள் அவதி

மாநகராட்சி குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தினால் தஞ்சை நகருக்குள் புகை பரவியதால் மக்கள் அவதிப்பட்டனர்.

Update: 2019-06-22 22:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை ஜெபமாலைபுரத்தில் 21 ஏக்கர் பரப்பளவில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. தஞ்சை மாநகரில் உள்ள 51 வார்டுகளில் உள்ள வீடுகள், திருமண மண்டபங்கள், ஓட்டல்களில் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள் லாரிகள், டிராக்டர்கள் மூலம் குப்பைக்கிடங்கிற்கு கொண்டு வரப்படுகிறது. தினமும் 120 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

50 ஆண்டுகளாக ஒரே இடத்தில் குப்பைகள் கொட்டப்பட்டதால் மலைபோல் குப்பைகள் குவிந்துள்ளன. இந்த குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் குப்பைக்கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. அடிக்கடி தீ விபத்து ஏற்படுவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களும், மாநகராட்சி அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்கள் அவதி

கடந்த சில நாட்களாக தொடர்ந்து குப்பைக்கிடங்கில் தீ எரிந்து கொண்டிருக்கிறது. இதனால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்ததால் யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. நேற்று தஞ்சையில் காற்று வேகமாக வீசியது. இதனால் குப்பைக்கிடங்கில் எரிந்து கொண்டிருந்த தீ மேலும் பரவியதுடன் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதனால் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டனர். வாகனங்களில் சென்றவர்களும் மிகவும் சிரமப்பட்டனர். இந்த புகை மேலஅலங்கம், மேலவீதி, நால்கால் மண்டபம் பகுதிகளிலும் பரவியது. இதன்காரணமாக அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இனிவரும் நாட்களில் காற்று வேகமாக வீசும் என்பதால் தொடர்ந்து புகை மண்டலத்தில் சிக்கி மக்கள் அவதிப்படுவதை தடுக்கும் வகையில் குப்பைக்கிடங்கில் பற்றி எரியும் தீயை அணைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்