காவல் கட்டுப்பாட்டு அறை அருகே பணத்தகராறில் மோதல்; வாலிபருக்கு கத்திக்குத்து தப்பி சென்ற ரவுடிக்கு போலீசார் வலைவீச்சு

திருச்சி மாநகர காவல் கட்டுப்பாட்டு அறை அருகே பணத்தகராறில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்தது. தப்பி சென்ற ரவுடியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2019-06-23 22:15 GMT
திருச்சி,

திருச்சி அரியமங்கலம் அம்மாகுளத்தை சேர்ந்தவர் வினோத்(வயது 33). இவரது நண்பர் காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த பாரூக் என்கிற பந்தா பாரூக். ரவுடியான இவர் மீது பல வழக்குகள் உள்ளன. இவர் தற்போது நாகையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். உறையூரை சேர்ந்தவர் டேனியேல். திருச்சியில் இருந்தபோது கார் விற்ற வகையில் பாரூக்கிற்கு டேனியேல் பணம் தர வேண்டும். அதேசமயம் வினோத்திற்கு பாரூக் பணம் தர வேண்டும்.

இந்தநிலையில் கார் விற்ற பணத்தை டேனியேலிடம் இருந்து வாங்குவதற்காக நேற்று முன்தினம் இரவு பென்வெல்ஸ்ரோட்டில் நவீன காவல் கட்டுப்பாட்டு அறை அருகே பாரூக் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த டேனியேலுடன் அவர் பேசி கொண்டு இருந்தனர். அங்கு பாரூக் இருப்பதை அறிந்த வினோத்தும் சிறிதுநேரத்தில் அங்கு வந்து சேர்ந்தார். உடனே அவர் பாரூக்கிடம் பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு திடீர் மோதலானது.

இதில் ஆத்திரம் அடைந்த பாரூக் தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து வினோத்தை சரிமாரியாக குத்தினார். இதில் வினோத் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே பாரூக்கும் அவருடன் வந்த நண்பர்கள் மற்றும் டேனியேலும் அங்கிருந்து தப்பி சென்றனர். வினோத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த போலீசார் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகர் வழக்கு பதிவு செய்து, கத்தி குத்து சம்பவத்தில் ஈடுபட்டு தப்பி சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார். கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்கள் உள்ள பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்