கணினி இயக்குபவர் பணிக்கான ஆன்லைன் தேர்வில் சர்வர் கோளாறு: தேர்வு மையம் முன்பு அமர்ந்து தேர்வர்கள் போராட்டம்

கணினி இயக்குபவர் பணிக்கான ஆன்லைன் தேர்வில் சர்வரில் கோளாறு ஏற்பட்டதால் தேர்வு மையம் முன்பு அமர்ந்து தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கும்பகோணத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-23 23:00 GMT
திருப்பனந்தாள்,

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் கணினி இயக்குபவர் பயிற்றுனர் நிலை-1 (முதுநிலைஆசிரியர் நிலை) பணிக்கான ஆன்லைன் தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது.

அதன்படி தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த தேர்வு நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பேராவூரணி, திருவாரூர், நாகை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 314 தேர்வர்கள் கலந்து கொண்டனர்.

இந்த தேர்வில் கலந்து கொள்ள கர்ப்பிணிகளும், கைக்குழந்தைகளுடனும் பெண்கள் வந்திருந்தனர். தேர்வர்களின் ஹால்டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை இணையதளம் மூலம் சரிபார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தேர்வர்கள் ஆன்லைனில் தேர்வு எழுதிய போது கணினி சர்வரில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தேர்வர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். மேலும், ஒருசிலர் ஆவணங்கள் சரிபார்க்க காலதாமதம் ஆனதால் தேர்வு எழுதவில்லை.

பின்னர் தேர்வு நேரம் முடிந்து வெளியே வந்த தேர்வாளர்கள் தேர்வு மையம் முன்பு அமர்ந்து 1 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சர்வர் கோளாறு ஏற்பட்டதால் தேர்வு சரியாக எழுத முடியவில்லை என்றும், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை கலெக்டர் வீராச்சாமி, ஆசிரியர் தேர்வு வாரிய கண்காணிப்பாளர் பூபதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், தாசில்தார் நெடுஞ்செழியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மீண்டும் அனைவருக்கும் தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேதியில் தேர்வு நடத்த வேண்டும். அதற்கான உத்தரவை அரசு உடனடியாக வெளியிட வேண்டும். அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தேர்வாளர்கள் தெரிவித்தனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்