கலெக்டர் அலுவலகத்தில் தென் மண்டல வனத்துறை ஆய்வு கூட்டம் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்பு

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற தென் மண்டல வனத்துறை ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார்.

Update: 2019-06-23 22:45 GMT
நாகர்கோவில்,

தென் மண்டல (மதுரை) வனத்துறை ஆய்வு கூட்டம் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கி பேசினார். அரசு ரப்பர் கழக தலைமை வன பாதுகாவலர் அமித் அஸ்தானா வரவேற்றார். தென் மண்டல தலைமை வனப்பாதுகாவலர் கண்ணன் பேசினார். குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே, வனத்துறை தலைவர் துரைராசு, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், எம்.எல்.ஏ.க்கள் மனோ தங்கராஜ், ராஜேஷ்குமார், பிரின்ஸ், மாவட்ட ஆவின் கூட்டுறவு தலைவர் எஸ்.ஏ.அசோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முடிவில் மாவட்ட வன அதிகாரி ஆனந்த் நன்றி கூறினார்.

இதைத் தொடர்ந்து ரப்பர் தோட்ட தொழிலாளர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் வல்சகுமார், அனந்தகிருஷ்ணன் உள்பட பலர் திரளாக வந்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை சந்தித்து பேசினர். பின்னர் சில கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

அதாவது, அரசு ரப்பர் கழகம் மயிலார் தொழிற்கூடத்தை மூடிவிட்டு, அதிக செலவு செய்து கீரிப்பாறை தொழிற்கூடத்துக்கு ரப்பர் பால் எடுத்து சென்று பதப்படுத்தி விற்பனை ெசய்யப்பட்டபோது 125 பேரல் ரப்பர் பால் தரமில்லாததாக கூறி திருப்பி அனுப்பப்பட்டது. இதனால் பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டது. ஆனால் இழப்பு பெரிதாக இல்லை என்று தவறு செய்தவர்கள் கூறுகிறார்கள். எனவே தவறு செய்த அதிகாரிகளை அவர்களது பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இழப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்க வேண்டும். தொழிலாளர்களின் இடைக்கால ஊதிய உயர்வு உள்ளிட்ட உடன்பாடுகளை இறுதி செய்திட தொழிலாளர் துறையின் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்துதல் அவசியம். தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். வன விலங்குகள் தாக்கி உயிர் இழக்கும் தொழிலாளர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இவற்றை ஒவ்வொன்றாக கேட்ட அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

முன்னதாக குமரி மாவட்டம் வந்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கு குமரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்