திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டம்

திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் குவாரி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி 8 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-06-23 23:15 GMT

அரசூர்,

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.புதுப்பாளையம் தென்பெண்ணையாற்றில் கடந்த 2013–18 வரை அரசு மணல் குவாரி செயல்பட்டு வந்தது. அதன்பிறகு அந்த மணல்குவாரி மூடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.புதுப்பாளையம் அடுத்த அண்டராயனூர் தென்பெண்ணையாறு பகுதியில் மணல்குவாரி அமைக்க அரசு அனுமதி வழங்கியது. இதையறிந்த டி.புதுப்பாளையம், அண்டராயனூர் உள்ளிட்ட 8 கிராம மக்கள் இங்கு மணல்குவாரி அமைந்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, விவசாயத்துக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும் என்று கூறி மணல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை அண்டராயனூர் பகுதியில் மணல் குவாரி அமைக்க முதற்கட்டமாக பொக்லைன் எந்திரம் மூலம் கொட்டகை மற்றும் பாதை அமைக்கும் பணி நடைபெற்றது.

இதுபற்றி தகவல் அறிந்த டி.புதுப்பாளையம், அண்டராயனூர், சி.மெய்யூர், அண்ணாநகர், சித்தலிங்கமடம், ஆற்காடு, வீரமடை, பையூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மணல்குவாரி அமைக்கப்படும் இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் இங்கு மணல் குவாரி அமைத்தால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், விவசாயம் அழிந்து விடும்.

ஆகவே இங்கு மணல்குவாரி அமைக்கக்கூடாது என்று கூறி கொட்டகை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட 8 கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், மணல்குவாரி பிரச்சினை குறித்து மாவட்ட கலெக்டரை சந்தித்து மனு கொடுக்குமாறு கூறினர். இதனை ஏற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே மணல்குவாரி அமைக்கும் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், ஊழியர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

மேலும் செய்திகள்