ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை தாக்கிய பெண் பயணி வீடியோ வெளியாகி பரபரப்பு

செல்போனை திருடிய ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர் ஊழியரை பெண் பயணி தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2019-06-23 23:30 GMT
மும்பை,

செல்போனை திருடிய ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர் ஊழியரை பெண் பயணி தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

செல்போன் மாயம்

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நந்தினி என்ற பெண் தனது தோழியுடன் வந்தார். அங்குள்ள டிக்கெட் கவுண்ட்டரில் கார் பகுதிக்கு செல்வதற்காக டிக்கெட் எடுத்தார். பின்னர் அங்கிருந்து பிளாட்பாரம் நோக்கி சென்று கொண்டிருந்த போது, தனது செல்போனை டிக்கெட் கவுண்ட்டரிலேயே மறந்து வைத்து விட்டதை அறிந்து எடுக்க சென்றார். ஆனால் அங்கு செல்போன் இல்லை. மேலும் செல்போனின் கவர் மட்டும் டிக்கெட் கவுண்ட்டர் அருகில் கிடந்தது.

சரமாரி தாக்குதல்

உடனே நந்தினி தனது தோழியின் செல்போனில் இருந்து தனது போனுக்கு கால் செய்தார். இதில் அவரதுசெல்போன் சுவிட்ச்-ஆப் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. உடனே டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த ஊழியர் மனோஜ் ஜெய்ஸ்வாலிடம் கேட்டார்.

அவர் தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

ஆனால் அவர் மீது சந்தேகம் அடைந்த நந்தினி டிக்கெட் கவுண்ட்டருக்குள் நுழைந்து அங்குள்ள மேஜையை திறந்து பார்த்தார். அப்போது அதில், அவரது செல்போன் இருந்தது. மேலும் அவரது செல்போன் எண்ணின் சிம் மனோஜ் ஜெய்ஸ்வாலின் பேண்டு பையில் இருந்தது தெரியவந்தது.

இதனால் கடும் கோபம் அடைந்த அவர் டிக்கெட் கவுண்ட்டர் ஊழியர் மனோஜ் ஜெய்ஸ்வாலை பிடித்து சரமாரியாக தாக்கினார்.

பணி இடைநீக்கம்

இதை அங்கிருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் பிடித்தனர்.

இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பெண் பயணியின் செல்போனை திருடிய புகாரில் சிக்கிய ஊழியர் மனோஜ் ஜெய்ஸ்வால் அதிரடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்