அம்மா இருசக்கர வாகனங்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு

அம்மா இருசக்கர வாகனங்கள் பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்து உள்ளார்.

Update: 2019-06-23 22:06 GMT
திருவள்ளூர்,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் மற்றும் சுயதொழில் செய்யும் பெண்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு எளிதில் செல்லவும், பல்வேறு பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் ஏதுவாக அவர்களுக்கு உதவும் வகையில் அம்மா இருசக்கர வாகனம் வாங்க 50 சதவீதம் மானியம் அல்லது ரூ.25 ஆயிரம் (இவற்றில் எந்த தொகை குறைவோ அந்த தொகை) வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2017-18-ம் ஆண்டு முதல், வருடத்திற்கு ஒரு லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் அனைத்து ஊரகம், பேரூராட்சிகள், நகராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் பணிக்கு செல்லும் பெண் மாற்றுத்திறனாளிகள் நலனை கருத்தில் கொண்டு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு ஏற்கனவே பெண் பயனாளிகளுக்கு வழங்கும் மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து கூடுதலாக 25 சதவீதம் உயர்த்தி ரூ.31 ஆயிரத்து 250-ஆக வழங்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 2018-19-ம் ஆண்டில் பணிக்கு செல்லும் பெண்கள் மற்றும் பெண் மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கடந்த 20-ந் தேதி முதல் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. ஜூலை 4-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்ப மனுக்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப மனுக்களை உள்ளாட்சி, நகராட்சி அலுவலக இணையதளங்களில் பதிவேற்றம் செய்யலாம்.

எனவே தகுதியுள்ள பயனாளிகள் மேற்குறிப்பிடப்பட்டுள்ள கால அட்டவணையின்படி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களை தொடர்புகொண்டு அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்திற்கு கூடுதல் அவகாசம் வழங்கியுள்ள வாய்ப்பை தவறாமல் அனைத்து மகளிர் மற்றும் பெண் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்