வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி; அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு

திருப்பாச்சேத்தி வைகை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணியினை அமைச்சர் பாஸ்கரன் ஆய்வு செய்தார்.

Update: 2019-06-23 22:45 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் வட்டம், திருப்பாச்சேத்தி ஊராட்சியிலுள்ள வைகை ஆற்றில் ஊரக வளச்சித்துறையின் சார்பில் தடுப்பணை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை அமைச்சர் பாஸ்கரன், கலெக்டர் ஜெயகாந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அப்போது அமைச்சர் பேசியதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கிராமங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்தார். அவருக்கு பின்பு தற்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றனர்.

மழைக்காலங்களில் கிடைக்கக்கூடிய தண்ணீரை சேமித்து விவசாயத்திற்கும் மற்றும் குடிநீர் ஆதாரத்திற்கும் பயன்படுத்த வேண்டும்.

ஆகவே தண்ணீரை சேமித்து வைக்க பொதுமக்கள் முன்வந்து மழைநீர் சேமிப்பு மையங்களை உருவாக்க வேண்டும். அந்தவகையில் தற்போது வைகை ஆற்றில் திருப்பாச்சேத்தி மற்றும் முத்தனேந்தல் பகுதியில் தலா ரூ.70 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கப்படுகிறது.

இந்த தடுப்பணை ஆற்றின் குறுக்கே பிரமாண்ட பள்ளம் தோண்டி அதில் மணல் மூடைகள் அடுக்கி, அதன்மேல் மணல் மூலம் தளம் அமைக்கப்படுகிறது. இதனால் மழைக்காலத்தில் வைகையாற்றில் தண்ணீர் வரும் போது, இந்த பகுதியில் நீர் தேங்கி மணல் மூடைப்பகுதி முழுவதும் தண்ணீரை உறிஞ்சி தேக்கி வைப்பதால் கரைகளின் இருபக்கங்களிலும் உள்ள நிலத்தடி நீர்மட்டம் உயரும்.

மேலும் இந்த பகுதியில் ஆழ்துளை கிணறுகளில் தேவையான அளவு தண்ணீர் இருக்கும். அது விவசாயப் பணிகளுக்கும், பொதுமக்களுக்கான குடிநீர் தேவையையும் பூர்த்தி செய்யும்.

தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் பணியாற்றுவதால் தனிநபர் பொருளாதாரமும் முன்னேற்றமடையும். நிலத்தடி நீர்மட்டம் நிலையாக இருப்பதற்கு இந்த திட்டம் மிகப்பயனுள்ளதாக இருக்கும். தற்போது 2 இடங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த திட்டம் மேலும் 5 இடங்களில் புதிதாக அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வு பணியின் போது நாகராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், வடிவேல், ஊரக வளர்ச்சி முகமை பொறியாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜஹாங்கீர், முத்துக்குமார், தாசில்தார் ராஜா உள்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்